புதிய கொள்கை ஏன்? குடி அரசு - சொற்பொழிவு - 15.03.1931

Rate this item
(0 votes)

சகோதரர்களே புதிய கொள்கைகள் ஏன் என்கின்ற விஷயத்தைப் பேசுவேன் என்பதாகத் தலைவரவர்கள் குறிப்பிட்டார்கள் 

புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியேயாகும். அதற்குப் பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்குப் பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு, பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம். நம்மைப் போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதிய கொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கடைந்து வருகின்றன. புதிய கொள்கைகளின் பயனாக மக்கள் எவ்வளவோ முற்போக்கடைந்து வருகின்றார்கள். 

நம்மிடம் வேறு எந்தவிதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும், பழைய கொள்கைகளைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும், புதிய கொள்கைகளிடம் துவேஷமும், வெறுப்பும் காட்டுவதிலும் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குபவர்களாய் இருக்கின்றோம். ஒரு காலத்தில் காட்டிமிராண்டிகளாய் இருந்ததாகச் சொல்லப்படும் ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் இன்று உலக சமூகத்தில் தலைசிறந்து விளங்கி வருவதற்குக் காரணம் புதுக்கொள்கைகளை ஏற்கத் தாராளமாய் முன்வந்து பழையக் கொள்கைகளைக் கைவிடுவதில் சிறிதும் தயக்கங் காட்டாததேயாகும்.

எவ்வளவு கீழான நிலைமையில் இருந்த ஜப்பானியர்கள் இன்று ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள் மிகவும் மேன்மையாய் மதிக்கத் தகுந்தவர்களாகவும், மற்றவர்கள் பார்த்து அவர்களைப் பின்பற்றும்படியாகவும் ஆனதற்குக் காரணம் அவர்கள் மற்றெல்லாவற்றையும் புறக்கணித்து முன்னேற்றத்தையே தலைமையாய் வைத்துச் சிறிதும் தயங்காமல் முன்னேற்ற வழிகளைக் கைக் கொள்ளப் பல புதிய கொள்கைகளைக் கைப்பற்றி பழைய கொள்கைகளைக் கைவிட்டதேயாகும். 

ருஷியா தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு அநாகரிகமாவும், கொடுங்கோன்மையாகவும் ஆளப்பட்டு வந்ததாக ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்சொல்லப்பட்ட தேசம், இன்று சமதர்மம், பொதுவுடைமையாகிய உண்மை ஜீவகாருண்யத்துறையில் எவ்வளவு முற்போக் கடைந்து உலகமே பிரமிக்கும்படியாகச் செய்து வருகின்றது என்பதைக் கவனியுங்கள். இதற்குக் காரணம் என்ன? அது பழைய கொள்கைகளைக் கை விடுவதிலும் புதிய கொள்கைகளைக் கைப்பற்றுவதிலும், காட்டின துணிகர மான வீரமல்லவா என்று கேட்கின்றேன்.

அது போலவே துருக்கி தேசத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அரைக்கால் நூற்றாண்டுக்குமுன் அதன் கதி எப்படி இருந்தது? ஐரோப்பாவால் எவ்வளவு வெறுக்கப்பட்டும், பயப்படுத்தப்பட்டும் இருந்து கொண்டு எவ்வளவு கவலையில் ஆழ்ந்திருந்தது. அப்படிப்பட்ட நாடு இன்று அந்த ஐரோப்பியர்களையே திகிலடையச் செய்து கொண்டிருப் பதற்குக் காரணம் என்ன பழையக் கொள்கைகளை விடவோ, மாற்றவோ துணிந்த துணிச்சலும், புதிய கொள்கைகளைப் புகுத்த எடுத்துக்கொண்ட முயற்சியால் அடைந்த வெற்றியுமல்லவாயென்று கேட்கிறேன். 

அதுபோலவே சைனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு கால் நூற்றாண்டுக் குள்ளாகவே எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின்றது. இப்போது ஒரு வீசம் நூற்றாண்டுகளுக்குள்ளாக எவ்வளவு பெரிய காரியம் செய்யத் துணிந்து, ருஷியாவைப் பின்பற்ற ஆசை கொண்டிருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள். இதற்கு காரணம் என்ன? பழைய கொள்கை களைப் பலிகொடுத்துப் புதிய கொள்கைகளுக்கு ஆக்கம் கொடுத்த பலன் அல்லவா என்று கேட்கின்றேன். அதிக தூரம் போவானேன்? இந்தப் பிரஞ்சு தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிரஞ்சு ரெவலூயூஷன் என்னும் உலகத்திற்கே பெரிய முதல் கிளர்ச்சியானது புதிய கொள்கைகளை அஸ்திவார மாகக்கொண்டுதானே துவக்கப்பட்டது. அதனால்தானே இன்று அது குடி அரசு ராஜ்யம் என்று சொல்லிக் கொள்ள இடமேற்பட்டது. 

புதிய கொள்கைகளின் அவசியத்திற்கு இன்னும் என்ன காரணமும், உதாரணமும் கேட்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. 

சகோதரர்களே! நமது இந்தியா தேசம் என்பது மேற்கண்ட நாடுகளைப் போன்றதுதானே? சில விஷயங்களில் அவைகளைவிடச் சிறந்ததும். பெரியதும், பூர்வீகமானது மென்று கூட நாம் சொல்லிக் கொள்ளுகின்றோமா? இல்லையா? இந்த நிலையில் நாம் அடைந்த முற்போக்கென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். பழைய கொள்கையைக் காப்பாற்றுவதிலும் அவை தானாகவே ஏதாவது இறந்து போய்க்கிடந்தால்கூட அவைகளை உயிர்ப் பிப்பதிலும்தானே கவலை கொண்டிருக்கின்றோம் என்று நான் சொல்வதற்கு நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். 

நம்முடைய சனாதன தர்மப் பிரசாரமெல்லாம் பழைய கொள்கை பிரசாரமல்லாமல் வேறு என்ன பிரசாரம் என்று எண்ணுகின்றீர்கள்? நம்முடைய தொல்காப்பியப் பிரசாரமெல்லாம் பழைய கொள்கை பிரசார மல்லாமல் வேறு என்ன பிரசாரம் என்று கருதுகிறீர்கள்? நம்முடைய சமயப் பிரசாரங்கள் என்பவைகள் எல்லாம் பழைய கொள்கைப்பிரசாரங்கள் அல்லா மல் வேறு என்ன பிரசாரங்கள் என்று சொல்ல வருகிறீர்கள் என்று கேட்கின்றேன் மற்றும் பொதுமக்கள் பெரிதும் கவலை கொண்டு நடத்திவரும் கோவில், குளம், உற்சவம், வேதம், தேவாரம், பாடசாலை, புராணம், சாஸ்திரம், காலக்ஷேபம், ராம ராஜ்யம், அரிச்சந்திர ராஜ்யம் ஸ்தாபிக்கும் முயற்சி ஆகியவைகள் எல்லாம் பழைய கொள்கைப் பிரசாரமல்லாமல் வேறு என்ன மாய் இருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள்.

மற்றும் ஆரிய தர்மம், பிராமண தர்மம். வர்ணாசிரம தர்மம். ஆகிய பிரசாரமெல்லாம் பழைய கொள்கைப்பிரசாரமல்லவா என்பதை நீங்களே சொல்லுங்கள். இந்த நிலைமையில் அதாவது பழைய கொள்கைகளில் இவ்வளவு தடிப்பு ஏறி இருக்கின்ற மக்களாகிய நம்மை யெல்லாம் உடைய தேசம் எப்படி மற்ற தேசங்களைப்போல் அதாவது பழைய கொள்கைகளைப் புதைத்து புதிய கொள்கைகளை விதைத்த நாட்டின் நிலையை அடைய முடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பழங் கொள்கைகளால் பயனில்லை யென்று கண்டவர்களும், புதிய கொள்கைகளால் மற்ற மக்கள் பயனடைந்து வருவதைப் பார்ப்பவர்களும் கண்டிப்பாய் பழைய கொள்கைகளை ஒழிக்கப் பாடுபட்டுத்தான் தீருவார்கள். அதைப்பார்க்கும் பழைய கொள்கைக்காரர்கள் ஆத்திரம் கொண்டு கோபித்து துவேஷித்து தங்களால் ஆன கெடுதியைச் செய்ய முன்வந்து தான் தீருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவ் வெதிர்ப்பைச் சமாளிக்கும் குணங்கள் புதிய கொள்கைக்காரர்களுக்கு இருந்தால் தான் புதிய கொள்கைகள் வெற்றி பெற்று நாட்டையும் சமூகத்தையும் முன்னுக்குக்கொண்டுவரச்செய்ய முடியும். இல்லாதவரை இந்த நிலைமையிலேயே இருக்க வேண்டியதுதான். ஆகையால் தான் நாங்கள் எங்களால் கூடிய அளவு புதிய கொள்கைகளுக்காகப் போராட நினைத்திருக்கின்றோம். இதிலுள்ள கஷ்டங்களை நாங்கள் உணராமல் இல்லை. 

நண்பர்களே! பழைய கொள்கைகள் பயனளிக்கவில்லையென்று சொல்லுவதில் நீங்கள் உண்மையான பழைய கொள்கை எது என்று பார்த்தீர்கலானால் நமது நாட்டில் உள்ள பழங்கொள்கைகளில் எல்லாவற்றிலும் பழமை யாயிருப்பது மதசம்பந்தமான கொள்கைகளேயாகும். 

அன்றியும் நான் மேலே சொல்லப்பட்ட எல்லா நாட்டாரும் தங்களுடைய பழங்கொள்கைகள் என்பதை மாற்றி, புதிய கொள்கைகளைப் புகுத்தியதில் பழமையான தென்பதும், மதசம்மந்தமானவைகளேயாகும். 

ஆகவே அந்தக் கருத்தைக்கொண்டே நம்நாட்டுப் பழங்கொள்கைகளைப்பற்றிப் பேசி புதுக்கொள்கைகள் ஏன் என்பதைப் பற்றி பிரஸ்தாபிப் பதில் மதத்தையே அடிப்படையாய் வைத்துச் சொல்லவேண்டியிருக்கின்றது. ஏனெனில் மனிதனுடைய அபிலாஷைகளும், எண்ணங்களும், நடவடிக்கைகளும், மதத்துடன் பிணைக்கப்பட்டதாகவே இருப்பதால் மனிதனிடத்தில் அவனது ஆசை. எண்ணம். நடவடிக்கை ஆகியவைகளிடத்தில் எவ்வித ஒருசிறிய மாறுதலை எதிர்பார்த்தாலும் அதை மதத்திலும் மாறுபடக் காண முடிந்தால்தான் முடியும். அப்படிக்கில்லாமல் மனிதனின் நடப்புக்கு ஆதாரமான பழைய மதக்கொள்கைகளை வைத்துக்கொண்டு மாறுதலை எதிர்பார்ப்பு தென்பது அடியற்ற பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளுவதாகவே முடியும். 

உதாரணமாக உண்மையிலேயே பழைய மதக்கொள்கைகள் என்ப வைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்காமல் இருக்குமானால் முன் சொல்லப்பட்ட ஐரோப்பா, பிரான்சு, ஜப்பான், துருக்கி, ருஷியா, சைனா முதலிய பெரிய பெரிய தேசங்களும், சமூகங்களும் இவ்வளவு பெரிய மாறுதலையும் முற்போக்கையும் அடைந்திருக்க முடியுமா என்பதை நீங்களே சற்று நிதான மாய் யோசித்துப்பாருங்கள். அதிலிருந்து புதுக்கொள்கைகள் ஏன்? என்பதற் குரிய காரணங்கள் விளங்காமல் போகாது, (தொடரும்) 

குறிப்பு புதுச்சேரியில் 01.03.1931 அன்று நடைபெற்ற மாநாட்டுரையின் தொடர்ச்சி 

குடி அரசு - சொற்பொழிவு - 15.03.1931

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.